கட்டுரை

இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர்! -கலைஞர் கடிதம் 1

அன்புடன் மு.க.

Staff Writer

உடன் பிறப்பே!நேற்று எழுதிய கடிதத்தில் 1953 ஆம் ஆண்டு ஜனவரி திங்கள் நாலாம் நாளன்று தமிழகம் முழுவதும்  கைத்தறித் துணிகளை விற்பனைச் செய்து, நெசவாளர்களின் கண்ணீரைக் கழகத்தினர் துடைத்தனர் என்று குறிப்பிட்டிருந்தேன் அல்லவா; அந்த ஆண்டு சென்னையில் பச்சையப்பன் திடலில் நடைபெற்ற திராவிடர் திரு நாள் விழாவையொட்டி பெரியவர் காஞ்சி மணிமொழியாரின் ‘போர்வாள்' இதழ் ஒரு மலர் வெளியிட்டிருந்தது. அந்த மலரை இன்று நாகர்கோயில் நண்பர் அப்துல் ரசாக் என்னிடம் தந்தார். அம்மலரில் வெளிவந்த மறைந்த தலைவர் என்.வி.என் அவர்கள் பேச்சின் ஒரு பகுதியை கோடிட்டுக் காட்டுகிறேன்.

' சொல்லளவில் மட்டுமல்ல செயலளவில் செய்து காட்டினோம். ஜனவரி 4 ஆம் தேதியன்று சென்னையிலே கருணாநிதி, திருச்சியிலே அண்ணா, காஞ்சியிலே துடிப்புள்ள புலவர் இராமசாமி, மதுரையிலே சிற்றரசு, கோவையிலே சம்பத், காரைக்குடியிலே நெடிஞ்செழியன், விருதுநகரிலே ஆசைத்தம்பி மற்றும் பல ஊர்களில் எல்லாம் கழகத் தோழர்கள் கைத்தறித் துணிகளை வியாபாரம் செய்தோம்'

அந்த விழாவில் இறுதியாகப் பேசிய அண்ணா அவர்கள் கைத்தறி பற்றிக் கூறியது இன்றைக்கும் நமது நினைவில் நிற்க வேண்டியதாகும்.

‘ நான் அணிந்திருப்பது கைத்தறி தான்! ஒவ்வொரு தோழரும் இனி கைத்தறி துணியையே வாங்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். பொங்கல் நாளன்று நம் தாய்மார்கள் உடலிலே மில் துணிகள் இருக்கக் கூடாது. கைத்தறி துணிகளையே வாங்க வேண்டும். ஒரு கஜம் மில் துணி வாங்கினால் பத்து நெசவாளிகளை நாம் கொலை செய்ததற்கு ஒப்பாவோம் என்பதை மனதிலிறுத்திக் கொள்ள வேண்டுகிறேன். கலங்கிக் கண்ணீர் வடிக்கும் கைத்தறியாளர்களைக் காப்பது நமது கடமை'

1953 ஜனவரி பொங்கல் விழாவில் சென்னை பச்சையன் திடலில் அண்ணா விடுத்த வேண்டுகோள் இது!

உடன்பிறப்பே, நமது அண்ணன் அன்றைக்கு வாலிப முறுக்குடன் மேடையில் நின்று தென்றலாய் வீசியதையும் & புயலாகச் சீறியதையும் - நேரில் கண்டு மகிழ்ந்தவர்கள் நிறைந்த பாசறையன்றோ நமது கழகப் பாசறை! எத்துணை கடும் உழைப்புக்குப் பிறகு - தியாகத்துக்குப் பிறகு & இன்றும் இந்தக் கழகம் கட்டுக்கோப்புடன் கூடிய ஜனநாயக முகாமாகத் திகழ்கிறது என்பதை எண்ணிப் பெருமையடைந்திட இது போன்ற பழைய நாள் படங்கள், நிகழ்ச்சிகள் பெரிதும் உதவுகின்றன அல்லவா?

பேராசிரியரையும், நாவலரையும் திருவாரூரில்'முரசொலி' இதழ் ஆண்டு விழாவுக்கு நான் அழைத்துக் கூட்டம் போட்டது 1942 ல்! அதற்கு முன்பே 1937 - 38 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர் அணிக்குத் தலைமையேற்று புலி,வில்,கயல் பொறித்த தமிழ்க் கொடியேந்திக் களம் கண்ட வரலாறு என்னுடையது!

எனவே இன்று கழகத் தலைவராகவும் பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றுள்ள நானும் பேராசிரியரும் தலைமைக் கழகத்தினர் பலரும் ஏறத்தாழ ஐம்பது  ஆண்டுகால வரலாற்றில் இடம் பெற்றவர்கள்.

 இன்று கழகத்தில் புது வெள்ளம் பாய்கிறது! பழைய வெள்ளம் அதனை வரவேற்கிறது! இளைய தலைமுறையை மூத்த தலைமுறை அழைக்கிறது!

வெள்ளம் பெருகுவதால் - கரை உயர்த்தப் படுவது போல; கழகத்தின் கட்டுப்பாடும் ஒழுங்குமுறையும் காத்திட முனைதல் இயல்பு! மூத்தோர்க்கு இளையோர் காட்டும் மரியாதை; இளையோரிடம் மூத்தோர் காட்டும் வாஞ்சை; இரண்டும் இணைந்திடில் வெள்ளம் எவ்வளவு பெருகிடினும் கரையுடையாது, கட்டுப்பாடுடன் கொள்கைப் பயிர் வளர்க்கக் கழகக் கழனியில் பாய்ந்து வளமாக்கிடும்!

இளையோராய் இருந்த நாங்கள் இன்று மூத்தோர்!

இன்றைய இளையோர் நாளைக்கு மூத்தோர்!

உடன் பிறப்பே; பழைய படங்கள்! பழைய நிகழ்ச்சிகள்! பழைய நினைவுகள்! ஆனால் இன்றைக்கும் பயன்படக் கூடியவை!

கடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பிப் பார்த்து - மேலும் கடக்க வேண்டிய பாதையில் கம்பீர நடை போடுமாம் சிங்கம்!

(1988 - ல் எழுதப்பட்ட கடிதத்தின் சுருக்கம்)

ஆகஸ்ட், 2018.